Tuesday, April 2, 2013


"புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி"

புத்தம் சரணம் கச்சாமி என்பதற்கு அர்த்தம்  புத்தரிடம் சரண் புகுகிறேன் என்பது அல்ல. புத்தர் யாரையும் தன்னிடம் வந்து சரண் அடையுங்கள் என்று சொல்லவில்லை. அத்த தீப பவ, அதாவது நீயே உனக்கு ஒளி என்று சொன்ன அவர் எப்படி நம்மை அவரிடம் சரண் புக சொல்லுவார். புத்தம் சரணம் கச்சாமி  புத்தத்தில் சரண் புகுகிறேன் என்று அர்த்தம். புத்தம் என்றால் புத்தி அறிவு ஞானம். ஒவ்வொருவரும் உள்ளத்தை பகுத்து ஆராய்ந்து உய்த்து  அறிந்து அதன் மூலம் அறியும் அறிவில் சரண் புக வேண்டும் என்பதே புத்தர் சொன்ன புத்தம் சரணம் கச்சாமி.  

தம்மம் சரணம் கச்சாமி என்றால். புத்தரது கொள்கையில், மார்க்கத்தில், புத்தர் காட்டிய  பாதையில் சரண் புகுகிறேன் என்று அர்த்தம் அல்ல. தம்மம் என்றால் சத்தியம் அறவழி ஒழுக்கம். ஒவ்வுருவரும் தனது புத்தியால் உய்த்து ஆராய்ந்து அறிந்த பகுத்தறிவால் எது சத்தியம் என்று உணர்கிறார்களோ அந்த சத்தியத்தில் சரண் புகுங்கள் என்கிறார். புத்தர் கண்டு அறிந்து சொன்ன சத்தியம் என்பது புத்தரின் சத்தியம். அந்த சத்தியத்தை உண்மை என்று உணராமல் அறியாமல் அதில் சரண் புகுவது மற்றவர்களின் கொள்கையில் கருத்தில் சரண் புகுவது போல ஆகும். புத்தர் சொல்கிறார் என்பதற்காக எதையும் ஏற்றுக்கொள்ளாமல் எதையும் ஆராய்ந்து அறிந்து உண்மை சத்தியம் என்று உன் அறிவுக்கு பட்டால் அதை ஏற்றுக்கொள் அதில் சரண் புகு என்கிறார். 

சங்கம் சரணம் கச்சாமி என்றால் ஏதோ ஒரு ஸ்தாபனத்தில் சரண் புகுங்கள் என்றோ. புத்தர் ஏற்ப்படுத்திய பிக்குகளின் சங்கத்தில் சரண் புகுங்கள் என்றோ அர்த்தம் இல்லை. சங்கம் சரணம் கச்சாமி என்றால் சங்கத்தின் பண்புகளை பிக்குகளின் பண்புகளை என்னுள் வளர்த்து அந்த பண்புகளில் சரண் புகுகிறேன் என்று அர்த்தம். ஒழுக்கம், அறிவு, அன்பு, கருணை, முதித்தா, சகிப்புத்தன்மை, தியாகம், சத்தியம் எனும் சங்கத்தினற்க்காண உயர்ந்த பண்புகளிடம் சரண் புகுவதே சங்கம் சரணம் கச்சாமி.  தீய பண்புகளிடம் சரண் புகாமல் நற்பண்புகளிடம் சரண் புகுவதே சங்கம் சரணம் கச்சாமி.  

No comments:

Post a Comment